4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்.. ஆகஸ்டுக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்றும், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள் 25 முதல் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் டெல்லியில் கூறினார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நோயாளிகள் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை சராசரியாக 45 ஆயிரத்திற்கு மேல் இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,772 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94.3 1 லட்சம் ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் 443 பேர் இறந்துள்ளனர்.

இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,37,139 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தான் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மகராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கும் கேரளாவில் இன்று 3,382 பேருக்கும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பயணிகளுக்கு முகக்கவசம் மற்றும் சோப்புகளை வழங்கினார்.பின்னர் அவர் பேசியது: அடுத்த வருடம் முதல் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த முடியும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 25 முதல் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது சமூக அகலத்தை கடைபிடிப்பது உள்பட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனாவை எதிர்ப்பதற்கு நம்மிடம் இருக்கும் மிக முக்கியமான ஆயுதம் முகக்கவசமும், சேனிடைசரும் மட்டும் தான். உலகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஜனவரியில் ஒரே ஒரு பரிசோதனைக் கூடம் மட்டும் தான் இந்தியாவில் இருந்தது. ஆனால் தற்போது 2,165 பரிசோதனை கூடங்கள் நம் நாட்டில் உள்ளன. தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

More News >>