ஃபாஜி கேம் கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு ஆரம்பம்
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் கேம் ஏனைய 117 சீன செயலிகளுடன் சேர்த்து இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அப்போது பப்ஜிக்கு மாற்றாக ஃபாஜி (FAU-G) என்ற விளையாட்டு வர இருப்பதாகக் கூறப்பட்டது. PUB-Gக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மொபைல் கேம் என்பதைக் காட்டிலும் தேசபக்திக்கான விளையாட்டு என்ற ரீதியில் FAU-G குறித்து பெருமளவில் பேசப்பட்டது.
பெங்களூருவை மையமாகக் கொண்ட என்கோர் கேம்ஸ் (nCore Games) நிறுவனம் பாலிவுட் நடிகர் அக்சய் குமாருடன் இணைந்து ஃபாஜி கேமை உருவாக்கியுள்ளது. இதன் முதல் டீசர் அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. அதே மாதம் இவ்விளையாட்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், குறிப்பிடப்பட்ட சமயத்தில் அதை வெளியிட முடியவில்லை. இந்தியாவுக்கென்று மாற்றியமைக்கப்பட்ட PUBG Mobile India கேமும் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இரண்டின் அறிமுகமும் தாமதமாகிக் கொண்டே இருந்தது.
ஃபாஜி கேமின் முதல் டீசரில் இந்தியாவுக்குச் சீனாவுக்குமான மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இருப்பது போன்று விளையாட்டு காட்டப்பட்டது. ஃபாஜி எனப்படும் Fearless and United Guards என்ற விளையாட்டு தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. ஆனால், பயன்பாட்டுக்கு இன்னும் வராத நிலையில் அதற்கான முன்பதிவினை (pre-registration) செய்ய முடியும். முன்பதிவு செய்வோருக்கு மொபைல் கேம் பயன்பாட்டுக்கு வரும்போது அறிவிக்கப்படும். பதிவு செய்தோரின் ஸ்மார்ட்போன் விளையாட்டுக்கு ஏற்றதாக இருந்தால் அதிலேயே தரவிறக்கமும் ஆகும். தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே ஃபாஜி கிடைக்கிறது.