தமிழகத்தின் எந்த மடத்துக்கும் நித்யானந்தா மடாதிபதியாக முடியாது - மதுரை ஆதீனம் அதிரடி

தமிழகத்தில் உள்ள எந்த மடத்துக்கும் நித்யானந்தா மடாதிபதியாக முடியாது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக நித்தியானந்தா தன்னை அறிவித்துக் கொண்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா, ‘‘நான்தான் மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி என்றும், ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால் அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாகவே இருப்பார். அந்த நியமனத்தை எவராலும் ரத்து செய்ய முடியாது’’ என்றும் கூறியிருந்தார். இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் பதில் மனுவை திரும்பப் பெற்ற நித்தியானந்தா அதற்காக மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் மார்ச் 5ஆம் தேதி, ”நித்யானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்கு முடியும் வரை நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான எந்த இடங்களிலும் நுழைய தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் சமய நல்லிணக்கப் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள எந்த மடத்துக்கும் நித்யானந்தா மடாதிபதியாக முடியாது. பெங்களூரில் இருந்தபடியே அவர் ஆன்மீகப் பணிகளைச் செய்யலாம்.

மதுரை ஆதீனகுருவின் பேச்சை மீறி செயல்பட்டார். சைவ, சித்தாந்த மரபுகளை கடைப்பிடிக்காமலும், தன்னையே அவர் கடவுளாக அறிவித்துக் கொண்டதாலும் மதுரை இளைய ஆதீன பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>