350 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற வேண்டும் என்றால் ரோகித் சர்மா கட்டாயம் தேவை :முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 350 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கை எட்ட வேண்டுமென்றால் விராட் கோஹ்லி தலைமையிலான அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவின் உதவி கண்டிப்பாகத் தேவை என்று முன்னாள் இந்திய வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியுடனான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து இந்தியா தொடரை இழந்துள்ளது.

சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வியடைந்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 374 ரன்களும், அடுத்த போட்டியில் 389 ரன்களும் குவித்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் இமாலய ஸ்கோரை எட்டிப் பிடிக்க முடியாமல் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் முதலில் ரோகித் சர்மா எந்த அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காயம் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. எதிர்ப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார். ஆனால் காயம் குணமாகாததால் டெஸ்ட் அணியில் இருந்தும் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியது: முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது.

இந்த கடினமான வெற்றி இலக்கை பின்தொடர இந்திய அணியால் முடியவில்லை. ஓபனிங் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா இருந்திருந்தால் ஒருவேளை வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருக்க முடியும். ரோகித் இல்லாத சூழ்நிலையில் தான் இந்தியா தோல்வி அடைந்தது என்பதே என்னுடைய கருத்தாகும். 350 ரன்ககளுக்கு மேல் எடுக்க வேண்டுமென்றால் குறிப்பாக இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது கண்டிப்பாக ரோகித் சர்மா அணியில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>