விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு..
நடிகர் விஜய் சேதுபதி கடந்த மாதம் சர்ச்சையில் சிக்கினார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையாக உருவாகவிருந்த 800 படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையொட்டி விஜய் சேதுபதி மகளுக்கு இலங்கை நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார். சர்ச்சைகளை கண்ட முத்தையா முரளிதரன் தனது வாழ்க்கை படத்திலிருந்து விலகிகொள்ள விஜய் சேதுபதியை கேட்டுக் கொண்டார். இதையடுத்து நன்றி வணக்கம் சொல்லி விஜய் சேதுபதி விலகினார். அப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு ஒன்றுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தின் படப்பிடிப்பு, தற்போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது.
விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரின் காட்சியைக் காண படப்பிடிப்புத் தளத்தைப் பார்க்க ரசிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணமிருக்கின்றனர். படத்தின் செட்களைப் பார்வையிடுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, படப்பிடிப்பைக் காண வந்த ரசிகர்கள் கொரோனா கால கட்ட விதிமுறைப்படி சமூக தூரத்தை பின்பற்றவில்லை மற்றும் முககவசம் அணியவில்லை. 'லாபம்' தயாரிப்பாளர்கள் இதனால் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு கொரோனா காலகட்ட விதிமுறைகளை விளக்கி வருகின்றனர்.
'லாபம்' படப்பிடிப்பு பத்து நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது, விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி இந்த படத்திற்காக ஒரு புதிய ஹேர் லுக்கை வெளியிட்டுள்ளார். இதில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியிடப்பட்டது, மேலும் விஜய் சேதுபதி ஒரு சமூக போராளியாக இதை நடிக்கிறார். 'இயற்கை', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' போன்ற தனித்துவமான படங்களுக்கு பிறகு இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் 'லாபம்' படத்தை இயக்குகிறார். புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் எஸ்பி.ஜனநாதன் இணையும் இரண்டாவது படம் இது. விவசாயத்தைப் பின்னணியாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.