ஆர்.டி.ஜி.எஸ் . இன்று முதல் அனைத்து நாட்களிலும் இயங்கும்
வங்கி கணக்கு ஆன்லைன் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்படும் முறைகளில் ஒன்றான ஆர்.டி.ஜி.எஸ் (RTGS ) முறை இன்று முதல் விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டிஜிஎஸ் முறையில் லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கானது. ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு டிசம்பரில், நெப்ட் எனப்படும் (NEFT) பரிவர்த்தனை ஆண்டு முழுவதும் எல்லா நாட்களிலும் எந்த நேரமும் ( 24x7x365) மேற்கொள்ள முடியும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது .
அதேசமயம் இன்னொரு பரிவர்த்தனை முறையான ஆர்டிஜிஎஸ் தற்போது, ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளைத் தவிர, வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்டிஜிஎஸ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வருகிறது.
ஆர்.டி.ஜி.எஸ் மூலம் அனுப்ப வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ. 2,00,000 ஆகும். இந்த பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வங்கி அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் எந்த நேரத்திலும் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
மேலும் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக, 2019 ஜூலை மாதம், ஆர்பிஐ நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மீதான கட்டணங்களை ரிசர்வ் வங்கி நீக்கியது நிறுத்தியது.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், இந்திய நிதிச் சந்தைகளின் உலகளாவிய ஒருங்கிணைப்பை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், சர்வதேச நிதி மையங்களை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை எளிதாக்குவதற்கும், உள்நாட்டு கார்ப்பரேட் மற்றும் நிறுவனங்களுக்குப் பரந்த கட்டண நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம், உலகளவில் 24x7x365 என்ற முறையில் இயங்கும் ஆர்டிஜிஎஸ் கட்டண முறையைக் கொண்ட மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.