புரவி புயல் எப்போது கரையைக் கடக்கும்? எங்கெங்கு மழை பெய்யும்?
தமிழ்நாட்டில் வீசிய நிவர் புயலால் மூன்று பேர் உயிரிழந்தனர். ஏறக்குறைய 2,064 மரங்கள் விழுந்தன. 108 மின்சார டிரான்ஸ்பார்மர்களும் 2,927 மின் கம்பங்களும் சேதமுற்றன. தற்போது வங்காள விரி குடாவில் புரவி என்ற புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் நாளை (டிசம்பர் 2) இலங்கையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரவி புயல் கரையைக் கடக்கும்போது இரண்டு நாள்கள் மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகியவற்றில் கன மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளில் டிசம்பர் 3ம் தேதி மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.