காவிரி விவகாரத்தில் அதிமுக உண்ணாவிரதம் இருப்பது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்
போலியாக உண்ணாவிரதம் இருந்து தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது. வழக்குகளை மட்டுமே தொடர்ந்து விட்டு அதிமுக அரசால் கை கழுவி விட முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போதே ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. கடந்த காலங்களைப் போல சாக்கு போக்கு சொல்லி இழுத்தடித்து வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. அதே போல மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் எடுபுடியாக நடக்கிறது ஆளும் அரசு. போலியாக உண்ணாவிரதம் இருந்து தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது. வழக்குகளை மட்டுமே தொடர்ந்து விட்டு அதிமுக அரசால் கை கழுவி விட முடியாது.
இன்றைய பொதுக்கூட்டத்தில் காவிரி பிரச்சினை பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் முக்கியமாக பேசப்படும் என்றும் அதிமுகவின் போலியான உண்ணாவிரதத்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. உண்ணாவிரதத்தின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை” என்று கமல் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை 5 மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் காவிரி விவகாரத்தில், 8ஆம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com