மகனை அறைக்குள் பூட்டி வைத்த தாய்: எத்தனை ஆண்டுகள் தெரியுமா?
ஒரு வாய் சோறு பிள்ளை சாப்பிட்டுவிடாதா என்று தாய்மார் ஏங்குவர். தாய்ப் பாசமே உலகில் உயர்ந்த பாசம். ஆனால், தன் மகனை அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகத் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஸ்வீடன் நாட்டில் நடந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டில் ஹானிங் நகராட்சியைச் சேர்ந்த ஹாண்டன் புறநகர்ப் பகுதியிலுள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஆண்டுக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை அவரது உறவினராகிய பெண் மீட்டுள்ளார். தற்போது 41 வயதாகும் அந்த மனிதரைத் தாய் ஏறக்குறைய 28 ஆண்டுகள் ஒரே அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சிறுவனாக 12 வயதில் அடைத்து வைக்கப்பட்டு தற்போது தான் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கால்களில் புண்களோடு, குறைந்த அளவே பேசக்கூடிய மற்றும் பற்கள் உதிர்ந்த நிலையில் அம்மனிதர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு இருக்கும் காயங்கள் உயிரைப் போக்கும் அளவுக்கு ஆபத்தானவை அல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை அடைத்து வைத்திருந்த தாய், அக்கம்பக்கத்தில் யாருடனும் அதிகமாகப் பேசிப் பழகுவதில்லையென்றும், வீட்டின் ஜன்னல்கள் எப்போதும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.
அவன் தாய் அவனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார் என்று தான் நினைத்தோம். ஆனால், இந்த அளவு பாடுபடுத்தியிருப்பார் என்று எண்ணவில்லை என்று அவரை மீட்ட உறவினராகிய பெண் தெரிவித்துள்ளார். ஆனால், அம்மனிதரின் தாய் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.