ஆதரவு தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ... கண்டித்த இந்திய அரசு!

இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டுள்ளனர். மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாரணாசி சென்ற பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசாத நிலையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர். ``நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றால்மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். நிபந்தனைகள் விதித்தால் எங்கள் போராட்டம் தொடரும்" என்று அறிவித்துள்ளனர். இதனிடையே, மத்திய அமைச்சர்கள் இன்று விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினர்.

இது ஒருபுறம் இருக்க விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். ``இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. இந்த செய்தி கவலை கொள்ள செய்கிறது. எங்களின் கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க எப்போதும் கனடா துணை நிற்கும்" என்று கூறியிருந்தார்.

இவருக்கு பதில் கொடுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ``விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் இதுபோன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றவை" எனக் கூறியுள்ளார்.

More News >>