நடிகை பலாத்கார வழக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏவின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ் குமாரின் வீட்டில் தற்போது போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று ஒரு பெண் நீதிபதியின் தலைமையில் கேரள உயர் நீதிமன்றம் தனி நீதிமன்றத்தை அமைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இரண்டு வாரங்கள் கேரள உயர்நீதிமன்றம் விசாரணையை நிறுத்தி வைத்த நிலையில் தற்போது மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த காசர்கோட்டை சேர்ந்த விபின்லால் என்பவர், தனக்கு போனில் கொலை மிரட்டல் வருவதாக போலீசில் புகார் தெரிவித்திருந்தார். நடிகர் திலீப்புக்கு ஆதரவாக வாக்கு மூலம் கொடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டல் வந்ததாக அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து காசர்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவரை மிரட்டியது கேரள ஆளும் கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் என தெரியவந்தது. இதையடுத்து பிரதீப் குமாரை காசர்கோடு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் போலீசுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. நடிகை பலாத்கார வழக்கை திசை திருப்ப சில முக்கிய பிரமுகர்கள் முயற்சி செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இன்று மாலை கேரள மாநிலம் கொல்லம் அருகே பத்தனாபுரத்தில் உள்ள எம்எல்ஏ கணேஷ் குமார் மற்றும் அவரது உதவியாளர் பிரதீப் குமாரின் வீட்டில் காசர்கோடு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தற்போதும் இங்கு சோதனை நடைபெற்று வருகிறது. நடிகை பலாத்கார வழக்கில் ஆளுங்கட்சி எம்எல்ஏவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>