டிசம்பர் 8-ஆம் தேதி முதல் பல்வேறு ரயில்கள் இயக்கம் : தென்னக ரயில்வே

கொரோனா தொற்று பரவலுக்கு பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், மதுரை வழியாக செல்லும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை துவங்கவுள்ளது. அந்த ரயில்களின் விபரம் : டிசம்பர் 10-ஆம் தேதி முதல் எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு மதுரை வழியாக அதிவேக சிறப்பு வாராந்திர ரயில் ஒவ்வொரு வியாழனன்றும் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை மாலை 6.55க்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 2.30க்கு மதுரைககும் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

அதே மார்க்கத்தில் நாகர்கோவிலிருந்து வெள்ளியன்று மாலை 4.15க்குப் புறப்படும் ரயில், அன்றிரவு 9 மணியளவில் மதுரையைச் சென்றடைவதுடன் மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும். அதேபோன்று நாகர்கோவிலிருந்து கோயம்புத்தூருக்கு அதிவேக சிறப்பு ரயில் வருகின்ற டிசம்பர் 8 முதல் நாள்தோறும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோயம்புத்தூரிலிருந்து நாள்தோறும் இரவு 7.30க்கு புறப்பட்டு நள்ளிரவு 12.35 மணியளவில் மதுரையை வந்தடைவதுடன் மறுநாள் காலை 5.05 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும். அதே மார்க்கத்தில் நாகர்கோவிலிருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 1.45 மணிக்கு மதுரையை வந்தடைவதுடன், அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு கோயம்புத்தூரைச் சென்றடையும்.

வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் குருவாயூர் வரை நாள்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8.25க்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் வழியாக மாலை 4.10க்கு மதுரையை வந்தடைவதுடன், திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக மறுநாள் காலை 6.40 மணிக்கு குருவாயூரைச் சென்றடையும். அதே மார்க்கத்தில் குருவாயூரிலிருந்து இரவு 9.30க்கு புறப்பட்டு மதியம் 12.05 மணிக்கு மதுரையை வந்தடையும். பிறகு மறுநாள் இரவு 8.35க்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

More News >>