கமிட்டி வேண்டாம்: மத்திய அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்

செப்டம்பரில் மழைக்கால கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கூறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலுமிருந்து பெருந்திரளாக விவசாயிகள் திரண்டு நவம்பர் 26ம் தேதி முதல் சிங்கு, டிக்ரி மற்றும் காஸிபூர் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரம் மற்றும் கண்ணீர் புகை இவற்றை பயன்படுத்தியும் விவசாயிகள் கலைந்து செல்லவில்லை. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மட்டுமே வருவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில் இன்று டெல்லி விக்யான் பவனில் மாலை 3 மணிக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பியூஸ் கோயல், வர்த்தக துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் மற்றும் வேளாண் துறை செயலர் சஞ்சய் அகர்வால் ஆகியோர் விவசாயிகளின் பிரதிநிதிகள் 35 பேருடன் பேசினர். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், வேளாண் சட்டங்களை குறித்து பரிசீலிக்க குழு ஒன்று அமைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார். விவசாயிகள் தரப்பில் பிரதிநிதிகளின் பெயரை தரும்படியும் அக்குழுவில் அரசு அதிகாரிகள் மற்றும் வேளாண்துறை வல்லுநர்களும் இடம்பெறுவர் என்றும் அவர் கூறினார்.

ஆனால், விவசாயிகள் குழு அமைக்கும் ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டனர். கமிட்டி அமைப்பது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என்று அவர்கள் தெரிவித்தனர். "சிறப்பு கமிட்டி அமைப்பது என்ற அரசின் முன்மொழிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும். அரசு பலபிரயோகம் செய்தாலும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. எங்கள் போராட்டம் தொடரும் என்று செய்தி நிறுவனங்களிடம் பாரதிய கிசான் யூனியன் என்று முக்கிய அமைப்பின் தலைவர் ரூப் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைக்க இருப்பதாகவும் டிசம்பர் 5ம் தேதி டெல்லி சென்று விவசாயிகளுடன் சேர்ந்து போராட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

"அவர்கள் மாதக்கணக்கில் அமைதியான வழியில் போராடி வருகின்றனர். அவர்கள் மீது தண்ணீரையும், கண்ணீர் புகையையும் பயன்படுத்தி கலைக்க முயற்சித்ததை கண்டிக்கிறோம்" என்று ஒலிம்பிக் ஹாக்கி வீரரும் அர்ஜூனா விருது பெற்றவருமான சஜ்ஜன் சிங் சீமா கருத்து தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ஓராண்டு கூட டெல்லியில் தங்கி போராடுவதற்கான உணவு பொருள்களை கொண்டு வந்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து டெல்லி விரைந்து கொண்டுள்ளனர். டிசம்பர் 3ம் தேதி அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

More News >>