உருவானது புரெவி புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இது நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
நேற்று இரவு 8.30 மணி அளவில் அது புயலாக வலுப்பெற்றதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இரவு 9 மணி நிலவரப்படி இலங்கையின் திரிகோண மலைக்கு 400 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவிற்குள் திரிகோணமலைக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று தெரிகிறது.புயல் கரையைக் கடந்த பின்னர் நாளை குமரிக்கடல் பரப்பில் நிலை கொண்டு, நாளை மறுநாள் 4 ஆம் தேதி கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாகத் தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்றும், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரையிலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகம் வரை காற்று வீசும் .
தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பரப்பில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.