கொரோனா பாதிப்பு 1404 ஆக குறைந்தது.. சிகிச்சையில் 10 ஆயிரம் பேர்..
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. புதிதாக 1404 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500க்கு கீழ் சென்றுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 221 மருத்துவமனைகளில் நேற்று(டிச.2) 66 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1404 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 83,319 பேராக உள்ளது.
மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1411 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 60,617 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 10 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,722 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,980 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 380 பேருக்கும், கோவையில் 142 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 47 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 41 ஆயிரம் பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.