புரெவி புயல் டிச.4ல் குமரியில் கரை கடக்கும்.. பாம்பனில் புயல் கூண்டு..
வங்கக் கடலில் உருவெடுத்துள்ள புரெவி புயல், வரும் 4ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கவுள்ளது. தற்போது பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நவ.24ம் தேதி நிவர் புயல் உருவெடுத்து சென்னை உள்பட வடமாவட்டங்களை அச்சுறுத்தியது. புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே அந்த புயல் கரையைக் கடந்தது. அப்போது சென்னை, கடலூர், புதுச்சேரிப் பகுதிகளில் கனமழை கொட்டியது. சென்னையில் பெரிய பாதிப்பு ஏற்படாவிட்டாலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நேற்று(டிச.1) இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:நவ.28ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலைக்குக் கிழக்கு மற்றும் தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இன்றிரவு(டிச.2) இலங்கை கடலோர பகுதிக்கு நகரும். நாளை(டிச.3) மன்னார் வளைகுடா பகுதிக்கு நகர்ந்து, டிச.4ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் நிலை கொண்டுள்ளதால், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யலாம்.
புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று பாம்பனில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.