பொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்..
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி(டெல்லி சலோ) என்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
டெல்லி-நொய்டா சாலை மூடப்பட்டுள்ளது. டெல்லியின் எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் 7வது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு குருத்வாரா நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் உள்பட பலரும் உணவு அளித்து வருகிறார்கள். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏற்கனவே அவர், நமக்கு உணவு அளிப்பவர்கள் சாலைகளில் குடியேறி போராடி வருகிறார்கள். ஆனால், ஆட்சியாளர்களோ தொலைக்காட்சிகளில் உரை ஆற்றி வருகிறார்கள்.
(பிரதமரின் மன் கி பாத் உரையை குறிப்பிட்டார்) என்று கமென்ட் அடித்திருந்தார். ராகுல்காந்தி இன்று வெளியிட்ட ட்விட்டில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று (பிரதமர்) சொன்னார்கள். ஆனால், என்ன நடந்துள்ளது? விவசாயிகளின் வருமானம் பாதியாகி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் வருமானம் 4 மடங்காக அதிகரித்துள்ளது. மோடி அரசு பொய்களின் அரசாக உள்ளது. சூட்-பூட் சர்க்காராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.