விவசாயிகளுக்கு ஆதரவு... விருதுகளை திருப்பி அளிக்கும் விளையாட்டு வீரர்கள்!
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு எதிராக டெல்லி சலோ என்ற போராட்டத்தைத் தொடங்கினர். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். பஞ்சாப், ஹரியானாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து விவசாயிகள் இன்று டெல்லி போராட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளனர். இதனால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போராட்டம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றது மத்திய அரசு. எனினும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றால் மட்டுமே பேசத் தயார் என விவசாயிகள் அறிவித்துள்ளதால் பேச்சுவார்த்தை நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது பெற்ற பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தரப்போவதாக அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 5 ஆம் தேதி டெல்லிக்குச் சென்று தங்கள் விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்க போகிறோம் என பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங் சீமா மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் அறிவித்துள்ளனர். இவர்களில் பாதி பேர் விவசாயி மகன், மகள்கள் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.