அரசியல் என்ட்ரி: ரஜினியை சந்தித்து தமிழருவி மணியன் வற்புறுத்தல்.. சூப்பர் ஸ்டார் சொன்ன பதிலால் சைலன்ட்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சு 1996ம் ஆண்டு முதலே பேசப்பட்டு வருகிறது. தனது படங்கள் வெளியாகும்போது தடாலடி அரசியல் கருத்துக்கள் சொல்லி விட்டு பிறகு அமைதியாகி விடுவதை ரஜினி கடைப் பிடித்து வந்தார்.கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ரஜினியை அரசியலுக்கு வரக் கேட்டு ரசிகர்கள் வற்புறுத்தினர். பாஜகவினரும் அவரை அரசியலுக்கு இழுக்க மறைமுகமாக முயன்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2017ம் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்னிலையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி சட்ட மன்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார். அதன்பிறகு கடந்த 2 வருடமாகக் கட்சி தொடங்காமல் அரசியல் கருத்துக்கள் மட்டும் தெரிவித்து வந்தார். ஆனால் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்து அதற்கு தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் பொறுப்பாளர்களை நியமித்தார்.
கடந்த மாதம் ரஜினி பெயரில் ஒரு அறிக்கை வெளியானது அதில், உடல்நிலை கருதி அரசியலுக்கு வருவதிலிருந்து விலகுவதுபோன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து பிறகு ரஜினி வெளியிட்ட அறிக்கையில், நான் வெளியிட்டது போல் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. அது போலியானது. என் உடல்நிலைபற்றி அதில் தெரிவித்திருந்தது மட்டும் உண்மை. என்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன் மாவட்டச் செயலாளர்களை அழைத்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அவரிடம் இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் கிடையாது. 6 கோடி தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். தலைவராக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதனை ரஜினி கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, நான் என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிக்கிறேன் என்று கூறினார்.
இந்நிலையில் காந்திய மக்கள் இயக்க தமிழருவி மணியன் ரஜினியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது ரஜினியை அரசியலுக்கு வருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அவர் சொன்னதை ரஜினி கவனமாக கேட்டார். ஆனால் அதனை ஏற்றுக்கொண்டதுபோல் ரஜினி சம்மதம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சில விவரங்களை ரஜினிகாந்த் அவரிடம் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து தமிழருவி மணியன் விடைபெற்றுப் புறப்பட்டார். பிறகு ரஜினியுடன் சந்திப்பு பற்றி அவர் கூறும்போது, தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் நடிகர் ரஜினிகாந்த்திற்கு எள் அளவும் இல்லை. அவர் வருவாரா என அவருக்குத்தான் தெரியும். உடல் நலத்துக்கு ஊறு இல்லாத வகையில் உங்களுடைய அரசியல் முடிவை அமைத்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன் என்றார்.