வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் திரு.அன்புமணி இராமதாஸ் தலைமையில் நேற்று முதல் சென்னையில் போராட்டம் வெடித்துள்ளது. பாமக நடத்திய போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய வன்னியர்சங்கத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பத்திரிகையாளர் வாராகி முறையீடு செய்தார். கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் நேற்று கோட்டையை நோக்கிய பேரணி நடந்தது.
இதில், பங்கேற்றவர்கள்,சாலை மறியல், ரெயில் மறியலில் ஈடுபட்டனர். பொதுசொத்துக்கள் மீது கல்லெறிந்து சேதப்படுத்தினர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட னர்.இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது சொத்துக்களுக்கு சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி, வழக்கு தொடர அனுமதி கேட்டு, பத்திரிக்கையாளர் வாராகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் முறையிட்டார்.
அத்துடன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.அதற்கு நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால், எந்த அமர்வு விசாரிக்க வேண்டும்என்பதை பதிவுத்துறை முடிவெடுக்கும் என்று கூறினர்.போராட்டத்தை நடத்தியவன்னியர் சங்கத்தை தடை செய்யக்கோரியும், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும் மனு தாக்கல் செய்ய இருப்பதாக வாராகி தகவல் தெரிவித்தார்.