கல்வான் தாக்குதலை திட்டமிட்டே நடத்திய சீனா!
நமது அண்டை நாடான சீனா கடந்த சில மாதங்களாக நமது எல்லையில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க முயற்சி எடுத்த போது நமது வீரர்கள் சீன ராணுவத்துடன் சண்டையிட்டனர். இதில் இந்தியத் தரப்பில் தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணமடைந்தனர்.
சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதன்பின் இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போர் பதற்றம் தணிந்தது. இதனிடையே, தான் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் நுழைய முயற்சித்தனர். ஆனால் இதனை இந்திய ராணுவம் முறியடித்தாலும், எல்லையில் தற்போது போர் பதற்றம் தொற்றியது.
இதற்கிடையே, கல்வான் பள்ளத்தாக்கு மோதலை சீனா திட்டமிட்டே செய்தது என்று அமெரிக்க உயர்மட்டக்குழு சீன பொருளாதார, பாதுகாப்பு மறு ஆய்வு ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ``தாக்குதலை திட்டமிட்டே சீனா நடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், தனது பக்கத்து நாடுகளுடன் எல்லையில் ராணுவ பதற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி கொள்ள சீனா இதுபோன்ற தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது" என்று அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.