சென்னை, கோவை சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடிப்பு..
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. எனினும், சென்னை, கோவை, சேலம் மாவட்டங்களில் தினமும் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 95 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. ஆனாலும் தற்போது சென்னை, கோவை, சேலம் தவிர மற்ற மாவட்டங்களில் தினமும் புதிதாக 50க்கும் குறைவானவர்களுக்குத்தான் நோய்த் தொற்று பாதித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500க்கு கீழ் சென்றுள்ளது.தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 221 மருத்துவமனைகளில் நேற்று(டிச.2) 68,854 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1428 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது.
இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 84,747 பேராக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1398 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 62,015 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 11 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,733 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,999 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் 397 பேருக்கும், கோவையில் 141 பேருக்கும், சேலத்தில் 99 பேருக்கும் நேற்று தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.
சென்னையில் இது வரை 2 லட்சத்து 16119 பேருக்கும், செங்கல்பட்டில் 47790 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 41084 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27,958 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 26 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.