நடிகை பலாத்கார வழக்கு நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்த சுனில்குமார் என்பவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பலாத்கார சம்பவத்திற்குப் பிரபல நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டினார் எனத் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடிகர் திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி தலைமையிலான இந்த விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகை தரப்பிலும், அரசுத் தரப்பு சார்பிலும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், 2 வாரங்களுக்கு விசாரணையை நிறுத்தி வைத்தது. பின்னர் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற தேவை இல்லை என்றும், விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கடந்த வாரம் விசாரணை தொடங்கியது. ஆனால் அரசு தரப்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் விசாரணை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரிய மனுவைக் கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகக் கேரள அரசு தீர்மானித்தது. இதன்படி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசுத் தரப்பில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

More News >>