கேரளாவில் பாப்புலர் பிரண்ட் தலைவர்களின் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறை திடீர் சோதனை
கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட 3 இடங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர்களின் வீடுகளில் இன்று காலை முதல் மத்திய அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் தீவிரவாத செயல்பாடுகளுக்கு துணை போவதாக நீண்டகாலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு பல்வேறு நாடுகளிலிருந்து நிதி உதவி செய்யப்பட்டு வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. சமீபத்தில் பெங்களூருவில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு போலீஸ் நிலையமும் சூறையாடப்பட்டது.
கலவரக்காரர்களை விரட்ட போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் உறவினர் தன்னுடைய பேஸ்புக்கில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்து இருந்ததாக கூறி இந்தக் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறினார்.
இந்நிலையில் இன்று கேரளாவில் 3 இடங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்த தலைவர்கள் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கொச்சி களமசேரியில் உள்ள பாப்புலர் பிரண்ட் தலைவர் அப்துல் ரகுமானின் வீட்டிலும், மலப்புரத்திலுள்ள நசுருதீன் என்பவரின் வீட்டிலும், திருவனந்தபுரத்தில் உள்ள அஷ்ரப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கொச்சியிலுள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரேசமயத்தில் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கேரளாவில் பரபரப்பு நிலவுகிறது.