இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல.. கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பேச்சு 1996ம் ஆண்டு முதலே பேசப்பட்டு வருகிறது. தனது படங்கள் வெளியாகும்போது தடாலடி அரசியல் கருத்துக்கள் சொல்லி விட்டு பிறகு அமைதியாகி விடுவதை ரஜினி கடைப் பிடித்து வந்தார்.கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ரஜினியை அரசியலுக்கு வரக் கேட்டு ரசிகர்கள் வற்புறுத்தினர். பாஜகவினரும் அவரை அரசியலுக்கு இழுக்க மறைமுகமாக முயன்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2017ம் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்னிலையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி சட்ட மன்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார். அதன்பிறகு கடந்த 2 வருடமாகக் கட்சி தொடங்காமல் அரசியல் கருத்துக்கள் மட்டும் தெரிவித்து வந்தார். இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன் மாவட்டச் செயலாளர்களை அழைத்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அவரிடம் இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் கிடையாது. 6 கோடி தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். தலைவராக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதனை ரஜினி கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, நான் என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிக்கிறேன் என்று கூறினார்.
அதன்படி தற்போது தனது அறிவிப்பை டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட டுவீட்டில், ``ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி கட்சி துவக்கப்படும் தேதி அறிவிக்கப்படும். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசியம்.. நிகழும்" என்றும் கூறியதுடன், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்றும் பதிவிட்டுள்ளார். அவரின் அரசியல் வருகைக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்