14,000 செல்போன்கள் கொள்ளை : தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றம்
சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 14,000 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்மலை என்ற இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 21 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேவாஸ் என்ற மாவட்டத்தில் 7 நபர்களைக் கைது செய்து நேற்று கிருஷ்ணகிரி அழைத்து வந்தனர். இதனிடையே இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை கொள்ளைக் கும்பல் சட்டவிரோதமாக பங்களாதேஷ் நாட்டிற்குக் கடத்தியுள்ளது. மேலும் கொள்ளை கும்பலுக்கு சுமார் 6 கோடி ரூபாய் பணம் ஹவாலா மூலமாகப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஹவாலா பணம் ரஷ்யா துபாய் மற்றும் வங்கதேசம் நாட்டிலிருந்து பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் சர்வதேச அளவில் பல கோடி ரூபாய் ஹவாலா மூலமாக நடை பெற்று உள்ளதால் இந்த வழக்கைத் தேசியப் பாதுகாப்பு முகமைக்கு மாற்றப் பரிந்துரை செய்வது எனக் கிருஷ்ணகிரி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விரைவில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு அமைப்பு மாற்றப்பட உள்ளது.