பஸ், ஆட்டோ, லாரி ஓடாது - மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம்!

காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மீட்க, அனைத்துக் கட்சிகள் விடுத்த அழைப்பின் அடிப்படையில், வியாழக்கிழமையன்று, மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலம், உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தும், அதனை அலட்சியம் செய்த மோடி அரசின் நயவஞ்சகத்தை கண்டித்தும், அந்த நயவஞ்சகத்திற்கு துணைபோகும் வகையில் கபட நாடகத்தை அரங்கேற்றி வரும் தமிழக அதிமுக அரசை அம்பலப்படுத்தியும், காவிரி உரிமை மீட்கும் போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையிலும் காலை 6 முதல் மாலை 6 மணி இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய சிபிஐ, ஐபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாமக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்புக்கு, அம்மாநில முதல்வர் நாராயணசாமி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துத் தொழிலாளர் சங்கங்கள், தமிழ்நாடு தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் த. வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செல்ல ராசாமணி உள்ளிட்டோர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, வியாழக்கிழமையன்று அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் சாலை மறியல் மற்றும் ரயில்நிறுத்தப் போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>