கட்சிகள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்றம்

கட்சிகள் தங்கள் வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆனால் முன்னாள், இந்நாள் அரசுகளும் அதையே செய்கின்றன என மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,புதிய மாவட்டமான தென்காசிக்கு 119 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 30 ஏக்கர் நிலம் உள்ளது இங்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை 11 ஏக்கரில் அமைய உள்ளது. மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் அமைந்தால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக அனுமதி அளிக்க வேண்டும். அதே சமயம் புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதன் மூலம் ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போன்ற போராட்டங்கள் நடைபெறும் பொழுது மருத்துவமனை செல்லும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும். . மருத்துவமனை விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான இடங்கள் இல்லாத நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாவட்டங்களைப் பிரிக்கும் பொழுது உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்ப்பதில்லை. 2 அல்லது 3 தொகுதிகள் இருக்கக்கூடிய அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன.மாவட்டங்களைப் பிரிக்கும் பொழுது குறைந்தது 5 சட்டமன்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பது போல் பிரிக்க வேண்டும்.

நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்டங்களைப் பிரிப்பது நல்லது. அரசியல் கட்சிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாவட்டங்களைப் பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆனால் முன்னாள், இந்நாள் அரசுகளும் இதைத்தான் செய்கின்றன என்றனர். பின்னர் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

More News >>