ஹீரோவை தாக்கிய பிரகாஷ் ராஜ் .. ஷூட்டிங்கில் இணைந்து நடிப்பாரா?
வில்லன் ஹீரோ, குணசித்ரம் எனப் பலமுகங்களை கொண்டவர் பிரகாஷ்ராஜ். தமிழ் தவிரக் கன்னடம்,தெலுங்கு எனப் பல மொழிகளில் நடிக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக அவர் அரசியலிலும். சமூக சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகாவில்தான் பிரகாஷ்ராஜின் அரசியல் ஈடுபாடு இருக்கிறது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் அவர் கடந்த முறை தேர்தலிலும் போட்டியிட்டார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.
தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் வக்கீல் சாப் படத்தில் நடிக்கிறார். பவன் கல்யாண் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் ஆவார். சிரஞ்சீவி அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் பவன் கல்யாண் தனிக்கட்சி நடத்தி வருகிறார். தற்போது தெலுங்கு மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கின்றன. இந்த தேர்தலில் பாஜவை ஆதரிக்கும் விதமாகப் பவன் கல்யாண் கட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித் தார். அப்போது பாஜவுக்கு ஆதரவாகப் பவன் கல்யாண் செயல்பாடுகள் இருப்பதாகப் புகார் கூறினார். இது சர்ச்சையானது. பவன் கல்யாண் ரசிகர்கள் பிரகாஷ்ராஜைக் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் பவனின் சகோதரர் நாகபாபு நடிகர் பிரகாஷ் ராஜை வன்மையாகக் கண்டித்தார். அப்போது, இதுபோன்ற சின்ன பசங்களுக்கு பவன் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பிரகாஷ்ராஜை வெளுத்து வாங்கினார். பிரகாஷ்ராஜின் பேச்சு பவன் கல்யாணையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
பவன் கல்யாண் நடிக்கும் வக்கீல் சாப் படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இது இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் அஜீத் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியானது. வக்கீல் சாப் படத்திற்காக பிரகாஷ்ராஜ், பவன் நடித்த சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டிருக்கின்றன. தற்போது இருவருக்கும் அரசியல் ரீதியாக மோதல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பவன் கல்யாண் பிரகாஷ்ராஜுடன் நடிக்கச் சம்மதிப்பரா என்ற குழப்பத்தில் தவிக்கிறது படக் குழு.