உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் வாலிபர், இந்துப் பெண் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸ்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் அமலாகியுள்ள நிலையில் முஸ்லிம் வாலிபர் மற்றும் இந்துப் பெண்ணின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். புதிய சட்டத்தின்படி முறையான அனுமதி பெற்ற பிறகே திருமணம் நடத்தமுடியும் என்று போலீசார் தெரிவித்ததால் திருமணம் நின்றது.உத்திரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக அவசரச் சட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு உத்திரப் பிரதேச மாநில கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்த புதிய சட்டத்தின்படி திருமணத்திற்குப் பின்னர் மதம் மாற விரும்பினால் 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற வேண்டும்.

மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தவில்லை என்று அவர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும். இதை மீறினால் இந்த அவசரச் சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். குற்றவாளி என்று நிரூபணம் ஆனால் 5 வருடம் வரை சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி திருமணம் செய்தால் தண்டனை 3 முதல் 10 வருடம் வரை கிடைக்கும். கூட்டமாக மத மாற்றம் செய்தாலும் இந்த தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில் லக்னோ அருகே உள்ள பாரா என்ற பகுதியில் ஒரு முஸ்லிம் வாலிபருக்கும், இந்துப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக லக்னோ போலீசுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்ததில் புகார் உண்மை எனத் தெரிந்தது. ஆனால் புதிய சட்டத்தின்படி அவர்கள் திருமணத்திற்கு முன் அனுமதி ஏதும் பெறவில்லை. இதையடுத்து திருமணத்தை நடத்துவதற்குத் தடை விதித்த போலீசார், இரு வீட்டினரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். திருமணத்திற்கு முன்பு லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று போலீசார் அவர்களிடம் கூறினர்.

இதையடுத்து திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இரு வீட்டினரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது என்றாலும் மாவட்ட மாஜிஸ்திரேட் அனுமதி பெற்ற பின்னரே திருமணம் நடத்த முடியும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து முறையான அனுமதி பெற்ற பின்னர் திருமணத்தை நடத்துவதாக இரு வீட்டினரும் போலீசிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை விடுவித்தனர்.

More News >>