சைக்கோ கில்லர் என்கவுண்டரில் பலி: 5 போலீசார் காயம்
பல மாநிலங்களில் ஆறுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சைக்கோ கில்லரை மத்திய பிரதேச போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த மோதலில் ஐந்து போலீசார் காயமுற்றுள்ளனர். கொலையாளியின் கூட்டாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளியன்று ஒரே குடும்பத்தில் மூன்று பேரை கொலை செய்த குற்றத்திற்காக தேடிச் சென்றபோது வியாழன் (டிசம்பர் 3) இரவு உஜ்ஜைனி மாவட்டத்தில் காச்ரோட் நாகா என்ற இடத்தில் என்கவுண்டர் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் தாகோத் என்ற இடத்தை சேர்ந்தவன் திலீப் டிவால் (வயது 38).
வயதானவர்கள் இருக்கும் வீட்டை குறிவைத்து அவர்களை கொல்லும் சைக்கோ கில்லர் என்றும், எந்தவித தடயமுமில்லாமல் கொலைகளை நிகழ்த்துவான் என்றும் கூறப்படுகிறது. தாகோத்தில் வியாபாரி ஒருவரை கொன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த திலீப், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரோலில் வந்தபோது தப்பித்துள்ளான். மத்திய பிரதேசத்திலுள்ள ராட்லம் என்ற இடத்தில் சிகை அலங்கார நிலையம் நடத்தி வந்த ஒருவர் சமீபத்தில் நிலத்தை விற்றுள்ளார். திலீப் டிவாலுக்கு அது தெரிய வந்துள்ளது. நிலத்தை விற்ற பணத்தை கொள்ளையடிப்பதற்காக சமயம் பார்த்து காத்திருந்துள்ளான்.
தீபாவளியன்று அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளான். பட்டாசு வெடிக்கும்போது துப்பாக்கி குண்டு வெடிக்கும் சந்தேகம் எழாது என்பதால் அவரையும் மனைவி மற்றும் மகளையும் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டுக் கொன்றுள்ளான். கடந்த ஜூன் மாதம் ஒரு பெண்ணை கொன்றதாகவும் திலீப் டிவால் மேல் குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திலீப்பை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.30,000/- வெகுமதி வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்திருந்தனர்.