கொடிகட்டி பறந்த பிரபல நடிகையின் கணவர் காலமானார்..
1970, 80 களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஜெயசித்ரா. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். சிவகுமாருடன் இவர் இணைந்து நடித்த வெள்ளிக்கிழமை விரதம் என்ற படம் பட்டி தொட்டி எங்கும் வசூல் மழை பொழிந்தது. அதில் நாகபாம்பின் பக்தையாக ஜெயசித்ரா நடித்திருப்பார். ஆனால் அவரது கணவர் சிவகுமாருக்கு பாம்பு என்றாலே பிடிக்காது. ஒரு கட்டத்தில் கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்பட கடைசியில் அவர்களை பாம்பு எப்படி சேர்த்து வைக்கிறது என்று அக்கதை முடியும். இது வெள்ளி விழா கண்ட படமாக அமைந்தது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் ஜெயசித்ரா. முன்னதாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய குறத்தி மகன் படத்தில் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய அரங்கேற்றம் படம் ஜெயசித்ராவுக்கு பெயரை பெற்றுத்தந்தது. சொல்லத்தான் நினைக்கிறேன், பணத்துக்காக, பட்டாம் பூச்சி, தேன் சிந்துதே வானம், அவள் ஒரு தொடர்கதை, இளமை ஊஞ்சலாடுகிறது என பல வெற்றிபடங்களில் நடித்தார். ஒரு சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளதுடன் அரசியலிலும் ஈடுபட்டார்.
கணேஷ் என்பவரை கடந்த 1983ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஜெயசித்ரா. இந்நிலையில் கணேஷ், திருச்சியில் நேற்றிரவு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் திருச்சியில் இருந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயசித்ரா வீட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. ஜெயசித்ரா கணேஷ் தம்பதிக்கு அம்பரீஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் தற்போது பிரபல இசை அமைப்பாளராக உள்ளார். ஜெயசித்ராவுக்கும் அவரது மகனுக்கும் உறவினர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.