அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 24 கோடி பரிசு

அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 24.13 கோடி பரிசு கிடைத்துள்ளது. இவர் தவிர மேலும் 4 இந்தியர்களுக்கும் பரிசு கிடைத்துள்ளது. பரிசு கிடைத்த 5 பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அபுதாபியில் பிக் டிக்கெட் என்ற பெயரில் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இதில் பரிசுத் தொகை பெரும்பாலும் பல கோடி இருக்கும். இந்நிலையில் நேற்று இதன் குலுக்கல் நடந்தது. இதன் முதல் பரிசு 1.2 கோடி திர்ஹாம் ஆகும். அதாவது இந்தியப் பணம் 24.13 கோடி. இந்த முதல் பரிசு கேரள மாநிலம் கோட்டயம் செங்களம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் (51) என்பவருக்குக் கிடைத்துள்ளது. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது இவர் துபாயிலுள்ள ஒமேகா மெடிக்கல்சில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்துடன் அபுதாபியில் வசித்து வரும் ஜார்ஜுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி பிஜி ஜார்ஜ் துபாயில் உள்ள ராஷித் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். மகள் டாலியா ஜார்ஜ், மகன் டானி ஜார்ஜ் ஆகிய இருவரும் துபாயில் படித்து வருகின்றனர்.

24.1 3 கோடி பரிசு கிடைத்தது குறித்து ஜார்ஜ் கூறியது: நான் கடந்த 2 வருடங்களாக பிக் டிக்கெட் லாட்டரி எடுத்து வருகிறேன். தனியாகவும், நண்பர்களுடன் சேர்ந்தும் இந்த டிக்கெட்டை எடுத்து வந்தேன். தற்போது இந்த டிக்கெட்டை நான் மட்டும் தான் எடுத்தேன். நீண்ட காலமாக எனக்குக் கண்டிப்பாகப் பரிசு கிடைக்கும் காத்துக் கொண்டிருந்தேன். பரிசுப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து குடும்பத்துடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன். கோடீஸ்வரனாகி விட்டேன் என்று கருதி நான் இந்த நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டுத் தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். எனவே பரிசுப் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவத் தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த டிக்கெட்டில் மொத்தம் 5 பேருக்குப் பரிசு கிடைத்தது. இவர்கள் அனைவருமே இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>