முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும்.. ரஜினி குறித்து முதல்வர் பதில்!
ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவேன் என்று நேற்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், ``எல்லோருக்கும் தலையெழுத்து இருக்கும். அதே போல, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து மாத்துவோம். இப்ப இல்லேன்னா.. எப்பவும் இல்லே" என்று தெரிவித்தார். மேலும், தனது கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் அறிவித்து அவர்களை அறிமுகப்படுத்தினார். ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ள விவகாரம் தான் தமிழக அரசியல் களத்தில் தற்போதையை ஹாட் டாப்பிக்.
இதற்கிடையே, ரஜினி நேற்று கட்சி குறித்த அறிவிப்பு வெளியிட்டவுடன் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ``ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம். ரஜினியின் வரவு நல்வரவாகட்டும். அரசியலில் எதிர்வரும் காலங்களில் எதுவும் நடக்கலாம். வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படும்" என்று கூறினார். அதேபோல், முதல்வர் பழனிசாமியோ, ``ரஜினியின் பேச்சை கேட்கவில்லை. கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன்" எனக் கூறினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம் ரஜினி தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ``ரஜினி அறிவிப்பு மட்டும்தான் வெளியிட்டுள்ளார். முதலில் அவர் கட்சியைப் பதிவு செய்யட்டும். அதன்பின் அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன். கற்பனையான விஷயம் தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.