`ரைஸிங் ஸ்டார் ரோஹினி... கமலா ஹாரிஸின் ஆலோசகரான இலங்கை பெண்!
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமலா ஹாரிசின் தாயார் சியாமளா கோபாலன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாய்வழி சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். சிறிய வயதிலேயே சியாமளா கோபாலன் அமெரிக்காவுக்கு சென்று நிரந்தரமாக தங்கி விட்டார். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொண்டாட்டங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே, கமலாவின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக ரோஹினி கொசோக்லு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ரோஹினி இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்கா பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள ரோஹினி உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அனைத்து துறைகளிலும் ஆலோசனை வழங்குவதில் 15 வருட அனுபவம் பெற்றவர். அமெரிக்க செனட் சபை, அதிபர் தேர்தல் பிரச்சார வேலைகளுக்கான ஆலோசகராக ஏற்கனவே கமலாவிடம் பணி புரிந்து இருக்கிறார் ரோஹினி. அமெரிக்காவின் மகளிர் மன்றம் இவருக்கு Rising star விருது வழங்கி கரவித்துள்ளது. `அமெரிக்காவில் உள்ள பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பதில் திறமையானவர்' என கமலா ஹாரிஸ் ஏற்கனவே இவரை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.