பிரிட்டன் ராணியை விட அதிக சொத்து வைத்திருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகள்!
பிரிட்டன்(இங்கிலாந்து) நிதி அமைச்சர் ரிஷி சுனக், பெங்களூரில் உள்ள இன்போசிஸ் தகவல் தொழில்நுட்பக் கம்பெனி நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மனைவி, அக்ஷதா மூர்த்தியின் சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளன. தனது தந்தையின் இன்போசிஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து வருகிறார் அக்ஷதா.
அதன்படி, 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை அக்ஷதா வைத்திருக்கிறார். அந்தப் பங்குகளின் தற்போதைய மதிப்பு சுமார் 4,200 கோடி ஆகும். இது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் சொத்து மதிப்பை விட அதிகம். ராணியின் சொத்து மதிப்பு சுமார் 3,400 கோடி ரூபாய். இருவரின் சொத்துக்கும் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி வித்தியாசம் என ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் தனது மனைவிக்கு இவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை ரிஷி சுனக் தேர்தலின்போது குறிப்பிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கிலாந்து சட்டப்படி இந்த விவரங்களை வெளியிட வேண்டும். ஆனால் ரிஷி அதனை வெளியிடாததால் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. அக்ஷதா மூர்த்தியும் ரிஷியும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.