ரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்கமாட்டார்: சொல்வது யார் தெரியுமா?

திராவிட சித்தாந்தம் கோலோச்சும் தென் மாநில அரசியலில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுபட மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வண்ணம் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக நேற்று (டிசம்பர் 3) ரஜினிகாந்த் அறிவித்தார். அது குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமாகிய எம். வீரப்ப மொய்லி, "தமிழ்நாட்டின் அரசியல் எப்போதும் திராவிட சிந்தாந்தத்தை வெளிப்படுத்தியே வந்துள்ளது. ஆகவே, ரஜினிகாந்த் அரசியலில் ஜொலிப்பார் என்று நான் எதிர்பாக்கவில்லை. காங்கிரஸால் தமிழ்நாட்டில் தனித்து நிற்க இயவில்லை. அதிமுக அல்லது திமுக கட்சிகளுடன் இணைந்து தான் நிற்கவேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு கட்சி அதாவது பிராந்திய கட்சியோடு இணைந்து செயல்படாத எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் தாக்குப்பிடிக்க முடியாது.

ரஜினிகாந்த் ஏற்கனவே தாம் பாஜகவின் பெரும்பாலான கருத்தியல்களோடு ஒத்திருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவே, அவரது கட்சி எடுபடாது. திராவிட சிந்தாந்தத்தை விட்டு வெளியே இருப்பாரென்றால் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது" என்று கருத்து தெரிவித்துள்ளார். வீரப்ப மொய்லி பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>