வாட்ஸ்அப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி
வாட்ஸ்அப் செயலியின் எல்லா அம்சங்களும் இணையம் (வாட்ஸ்அப் வெப்) மற்றும் மேசை கணிணியில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில் இல்லாத நிலை உள்ளது. இவற்றில் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். ஆனால் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதிகளுக்கு பயன்படுத்த முடியாது. அவற்றின் மூலமும் அழைக்கக்கூடிய வசதிக்கான சோதனையை வாட்ஸ்அப் நிறுவனம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா செயலியில் இம்முயற்சி நடைபெறுவது தெரிய வந்துள்ளது. தற்போது வாட்ஸ்அப் வெப்பில் அரட்டையின் மேல் பட்டியில் தேடுதலுக்கான பொத்தான் உள்ளது. குரல் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான வசதி வரும்போது, இந்தப் பட்டியின் அருகில் அவற்றுக்கான பொத்தான்கள் தரப்படும்.
அப்போது ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்லாது இணையம் மற்றும் மேசை கணினி மூலம் இயங்கும் வாட்ஸ்அப் மூலமும் அழைக்க முடியும். வாட்ஸ்அப் வெப்பில் அழைப்பு வரும்போது அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுக்கவும் உரிய பாப்-அப் தெரிவுகள் தோன்றும். அதேபோன்று அழைப்பை அலட்சியம் (ignore) செய்யும் பொத்தானும் இருக்கும். இங்கிருந்து அழைக்கும்போது வீடியோவை தொடங்குவதற்கு, ம்யூட் செய்வதற்கு, மறுப்பதற்கு என்று பல பொத்தான்கள் பாப்-அப்பில் தோன்றும். இந்த வசதி நடைமுறைக்கு எப்போதும் வரும் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.