வகுப்பறையில் தாலிகட்டி திருமணம் 3 பிளஸ் டூ மாணவர்கள் மீது நடவடிக்கை

பிளஸ் டூ படிக்கும் மாணவனும், மாணவியும் வகுப்பறையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் சமூக இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து 3 பிளஸ் டூ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.கடந்த இரு தினங்களாக ஆந்திர மாநிலத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்களில் ஒரு காட்சி வைரலாக பரவி வந்தது.

ஒரு பள்ளியில் வைத்து சீருடையில் உள்ள ஒரு மாணவனும், மாணவியும் திருமணம் செய்யும் அந்தக் காட்சி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவிக்கு மாணவன் வகுப்பறையில் வைத்து தாலி கட்டுகிறான். பின்னர் அந்த மாணவி, தன்னுடைய நெற்றியில் குங்குமம் வைக்குமாறு அந்த மாணவனிடம் கூறுகிறார். இதையடுத்து அந்த மாணவன், மாணவிக்கு நெற்றியில் குங்குமம் வைத்து விடுகிறான்.

இதை இன்னொரு மாணவன் தனது செல்போனில் பதிவு செய்து உள்ளான். சீக்கிரம் தாலியைக் கட்டு, ஆட்கள் வந்து விடப்போகிறார்கள் என்று அந்த வீடியோவை எடுத்த சக மாணவன் கூறுவதும் அதில் பதிவாகி இருந்தது. இந்த திருமணம் நடைபெறும் போது வகுப்பறையில் யாருமே இல்லை.இந்த வீடியோ ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து திருமணம் செய்த மாணவன் மாணவி மற்றும் வீடியோ எடுத்த மாணவன் ஆகிய 3 பேரும் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

இவர்கள் 3 பேரும் பிளஸ் டூ படித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசாரும், குழந்தைகள் நல அமைப்பினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது. மாணவியின் வீட்டினரைக் காண்பிப்பதற்காகவே அந்த வீடியோ எடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த வீடியோவை சமூக இணையதளத்தில் யார் பரப்பினார்கள் எனத் தெரியவில்லை.

More News >>