சிறையிலிருக்கும் ஸ்டன் சாமிக்கு ஸ்ட்ரா, சிப்பர் கிடைத்தது

தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு மகாராஷ்டிராவில் சிறையில் இருக்கும் பட்டியலினத்தவர் உரிமை செயற்பாட்டாளர் ஸ்டன் சாமிக்கு ஸ்ட்ரா மற்றும் சிப்பர் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 83 வயதாகும் ஸ்டன் சாமி, பீமா கோரேகான் என்ற கிராமத்தில் 2018ம் ஆண்டு நடைபெற்ற வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுக்காகச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்டன் சாமி, தனக்கு பார்க்கின்சன் பாதிப்பு இருப்பதால் தண்ணீர் அருந்தும் குவளையைப் பிடிக்க இயலாது என்பதால் தனக்கு உறிஞ்சு குழலை அனுமதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார். மத்திய நரம்பு மண்டலம் தொடர்பான பார்கின்சன் பாதிப்பு இருப்போருக்கு உடல் நடுக்கத்தின் காரணமாகப் பானங்களை அருந்துவது சிரமமாக இருக்கும். சிலருக்கு உணவை விழுங்கவும் மெல்லவும் முடியாத நிலை கூட ஏற்படும். ஆகவே, அன்றாட கடமைகளைச் செய்ய முடியாமல் அவதிப்படுவர். ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஸ்டன் சாமி இதற்காகக் கோரிக்கை வைத்து வருகிறார்.

கைது செய்யப்பட்டபோது தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பையைத் திரும்பத் தர உத்தரவு பிறப்பிக்கவேண்டும். தன்னை தலோஜா சிறையிலிருந்து மாற்ற அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட மூன்று புது மனுக்களை அவர் நேற்று (டிசம்பர் 4) மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அப்போது, சிறையில் அவருக்கு ஸ்ட்ரா மற்றும் சிப்பர் வழங்கப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் கூறியதாகச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சிப்பர், ஸ்ட்ரா மட்டுமல்ல, சக்கர நாற்காலி, ஊன்றுகோல், வாக்கர், இரு உதவியாளர்கள் உள்ளிட்ட வேறு வசதிகளையும் ஸ்டன் சாமிக்குச் செய்திருப்பதாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

More News >>