டிசம்பரில் சசிகலா வெளியாக வாய்ப்பா?!... பதில் கொடுத்த சிறை நிர்வாகம்
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். வங்கி வரைவோலையை(டிடி )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். இதையடுத்து சசிகலா எப்போது விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பரில் அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 3 சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்றும் இதை கர்நாடக சிறை நிர்வாகம் வாய்மொழியாக கூறியுள்ளதாகவும், அவரின் உறவினர்கள், நெருக்கமான நபர்கள் கூறினர். ஆனால் இதுநாள் வரை சிறை நிர்வாகத்திடம் இருந்து சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் வெளிவரவில்லை. இந்நிலையில், தண்டனை காலத்துக்கு முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து உள்ளார். சிறை அதிகாரிகள் அவரின் விண்ணப்பத்தை சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சசிகலா தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை ஆவாரா என சிறை நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், ``
சிறைத்துறை விதிமுறைப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட ஆண் சிறைவாசிகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் சிறைவாசிகளுக்கும், 14 ஆண்டுகள் சிறையிலுள்ள ஆண் சிறைவாசிகளுக்கும், 12 ஆண்டுகள் சிறையிலுள்ள பெண் சிறைவாசிகளுக்கும் மட்டுமே தண்டனை குறைப்பு செய்யப்படும். அவர்களுக்கு மட்டுமே அந்த விதி பொருந்தும். மற்றவர்களுக்கு அந்த விதி பொருந்தாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.