ரயிலில் இடம் தராத பயணி சுட்டுக் கொலை: சிஆர்பிஎப் காவலர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் தலைமைக் காவலர் அத்தூல் சந்திர தாஸ் என்பவர் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் கூப்பிட்டான் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் உட்கார இடம் கேட்டுள்ளனர். அதற்கு ராஜா இடம் கொடுக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் ஆத்திரமடைந்த அத்தூல் சந்திர தாஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜாவைச் சுட்டுக் கொன்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்தூல் சந்திர தாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார். இந்த வழக்கு கடந்த 2002ல் கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற விசாரணை தொடர்ந்து வந்த நிலையில் அப்துல் சந்திரதாஸ் தலைமறைவானதால் எனவே அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு அத்தூல் சந்திர தாஸை தேடப்பட்டு வந்தார். கடந்த 21 ஆம் தேதி தனிப்படை போலீசார் அஸ்ஸாம் மாநிலத்தில் பதுங்கியிருந்த அத்தூல் சந்திர தாஸை கைது செய்தனர். அவரை போலீசார் திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.