அகல்விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்.. ஜெயலலிதா நினைவு நாளில் ஓபிஎஸ்!
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றோடு நான்காண்டு ஆகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும், அவரது விசுவாசிகள், அவரின் கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உட்பட கட்சியினர் அவரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குபின் ``சமூக நீதியில் உறுதியான நம்பிக்கை, பெண் விடுதலையில் அசைக்க முடியாத பற்றுறுதி, எளிய மக்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பு என தனது அரசியல் பாதையில் புதுமையும் புரட்சியும் நிறைந்த போர் பாதையாக மாற்றி வாழ்ந்த அம்மா அவர்களுக்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன்" என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுஇருந்தார். தற்போது சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஜெயலலிதா புகைப்படத்தின் முன் அகல் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்தப் புகைப்படங்களை தங்கள் வலைதளத்தில் பதிவிட்டு இருந்த துணை முதல்வர் ஓபிஎஸ், ``தமிழக மக்களை நெஞ்சில் சுமந்து, நம் தன்னிகரில்லா அம்மா சேமித்து வைத்திருந்த கனவுகளையும், லட்சியங்களையும் சத்தியமாக்கிட அகல்விளக்கு ஏற்றி, அம்மாவின் திருவுருவப் படத்தின் முன்னே வீர சபதம் ஏற்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.