இந்திய அணியை எச்சரித்த, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்!
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஒருநாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் 2-1 என்று வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி.ஒருநாள் தொடரின் தோல்வியைத் தொடர்ந்து, கடந்த வெள்ளியன்று இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி கடந்த வெள்ளியன்று கேன்பராவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக தவான் உடன் ராகுல் களம் கண்டார். தொடக்கமே முதலே தடுமாறிய தவான் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலியும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில் ராகுல் ஒருபுறம் போராடி 51 ரன்களை விளாசினார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, அதிரடி வீரரான ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சர் தெரிக்கவிட்டு, 44 ரன்களை விளாசித் தள்ளினார்.
ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பந்து தலையில் தாக்கியது, என்னும் பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்தில் அதிரடி காட்டினார் சர் ஜடேஜா. ஆனால் இவருக்கு ஏற்கனவே முதுகுவலி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருவழியாக இந்திய அணி இருபது ஓவர் முடிவில் 161/7 ரன்களை சேர்த்தது.
இருபது ஓவர் முடிவில் 162 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி. இந்நிலையில் ஜடேஜாவிற்கு பதிலாக மாற்று வீரர் விதியின் படி, சஹல் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த மாற்று வீரர் விதி சமீபத்தில் கொரோனா தாக்கத்தால் ஐசிசி மேற்கொண்டது. இந்த விதியின்படி வீரருக்குப் பாதிப்பு ஏற்படும் போது மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம். எனவே இதன் அடிப்படையில் சஹல் அணியில் சேர்க்கப்பட்டார். இதனை முதலிலேயே ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளரான லாங்கர் விமர்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மாற்று வீரராகச் சேர்க்கப்பட்ட சஹலின் அதிரடியான பந்து வீச்சால் நிலைகுலைந்த , ஆஸ்திரேலியா அணி இலங்கை எட்ட முடியாமல் தடுமாறியது. அவருடன் கைகோர்த்த புதுமுக வீரரான தமிழகத்தைச் சார்ந்த நடராஜன் இணைந்து இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, ஆஸ்திரேலியா அணி 150/7 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்ட சஹல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐசிசியின் முன்னாள் உறுப்பினருமான மார்க் டெய்லர், இந்திய அணியின் இந்த மாற்று வீரர் செயலை கடுமையாகச் சாடியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், வீரர்களின் பாதுகாப்புக்காகக் கொண்டு வரப்பட்ட "மாற்று வீரர்" விதியை இப்படித் தவறுதலாகப் பயன்படுத்துவதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் வீரரின் சுய விருப்பம் இல்லாமல், அவருக்குப் பதில் வேறொரு வீரரைச் சேர்ப்பது அபத்தமானது என்றார்.
ஜடேஜாவிற்கு பந்து தாக்கிய போதும், அவர் மீண்டும் களத்தில் விளையாடிய நிலையில், மருத்துவர்களின் எவ்வித ஆலோசனையும் இன்றி சஹலை மாற்று வீரராக அணியில் சேர்த்தது மிகத் தவறு எனவும் சாடியுள்ளார். மேலும் நான் கூறுவது என்னவென்றால் அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் மிக அதிகமான பொறுப்புகளை எடுத்து போட்டியைச் சிறப்பாக ஆடவேண்டும். இந்த விதி வீரர்களைப் பாதுகாக்க மட்டுமே, எனவே இந்த விதியை சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என உறுதி செய்து விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.