வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. பலாத்காரத்திற்கு இரையான சிறுமியிடம் சில்மிஷம் செய்த குழந்தைகள் நல வாரிய தலைவர்...
பலாத்கார புகார் தொடர்பான விசாரணைக்கு சென்ற சிறுமியிடம் குழந்தைகள் நல கமிட்டி தலைவரே சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. சமீப காலமாக இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக போக்சோ பிரிவின் படி வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் குற்றங்கள் குறையவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக குழந்தைகள் நல கமிட்டி அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.
பலாத்கார சம்பவம் நடந்தால் இந்த கமிட்டி தான் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி என்ற இடத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பலாத்காரம் செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இது தொடர்பான விசாரணைக்காக அந்த சிறுமியை பெற்றோர் தலைச்சேரியில் உள்ள குழந்தைகள் நல கமிட்டி அலுவலத்திற்கு அழைத்துச் சென்றனர். கண்ணூர் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி தலைவர் ஜோசப் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் தலச்சேரி குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர்.
நீதிமன்றத்தில் அந்த சிறுமியிடம் விசாரணை நடந்தது. அப்போது, குழந்தைகள் நல கமிட்டி தலைவர் ஜோசப் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அந்த சிறுமி நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து ஜோசப் மீது வழக்கு பதிவு செய்ய தலச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து குழந்தைகள் நல கமிட்டி தலைவர் ஜோசப் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், பலாத்காரம் குறித்து விசாரிக்க மட்டுமே செய்தேன் என்றும் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார புகார்களை விசாரிக்கும் குழந்தை நல கமிட்டி தலைவரே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.