11வது நாள் போராட்டம்.. விவசாயிகளுக்கு குத்துசண்டை வீரர் விஜேந்தர்சிங் ஆதரவு.. விருதை திருப்பித் தர முடிவு..
டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு குத்துசண்டை வீரர் விஜேந்தர்சிங் நேரில் ஆதரவு தெரிவித்தார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்த தொடங்கினர். இதன்பின்னர், டெல்லியை நோக்கி பேரணி(டெல்லி சலோ) என்ற போராட்டத்தை தொடங்கினர்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் திரண்டு டெல்லிக்கு சென்றனர். அவர்களை டெல்லிக்கு வெளியே தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் அந்தந்தப் பகுதிகளிலயே உணவு சாப்பிட்டு, படுத்து தூங்கி போராட்டத்தை தொடர்கிறார்கள். இன்று(டிச.6) 11வது நாளாக போராட்டங்கள் தொடர்கின்றன. டெல்லி - நொய்டா சாலையில் சில்லா பகுதியிலும், டெல்லி - ஹரியானாவின் திக்ரி எல்லையிலும், தன்சா, தவ்ராலா, கபாகெரே, ஜாட்டிகரா, ராஜோக்கி போன்ற எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். இதனால், டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நடத்தியப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இதையடுத்து, அடுத்த கட்டமாக டிச.9ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளை பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் இன்று(டிச.6) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு இந்த கறுப்பு சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால், நான் எனக்கு அளிக்கப்பட்ட ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதை திருப்பிக் கொடுப்பேன் என்று தெரிவித்தார். வரும் 8ம் தேதியன்று நாடு முழுவதும் முழு அடைப்பு(பந்த்) போரட்டத்திற்கு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.