கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து கீழே விழுந்த தமிழக பெண் என்ன காரணம்?

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து சேலையை கயிறு போல கட்டி கீழே இறங்கும் போது தவறி விழுந்து சேலத்தை சேர்ந்த வீட்டு வேலைக்கார பெண் பலத்த காயம் அடைந்தார். அவர் எதற்காக இவ்வாறு கீழே இறங்கினார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் இம்தியாஸ் கான். கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர், அங்குள்ள மரைன் டிரைவ் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சேலத்தைச் சேர்ந்த குமாரி (55) என்ற பெண் வீட்டு வேலை செய்து வருகிறார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே அவருக்கு தங்குவதற்கு ஒரு அறையும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை குமாரியின் அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த இம்தியாஸ் கானின் மனைவி சென்று பார்த்த போது அறைக்குள் குமாரியை காணவில்லை. இதையடுத்து அவரை தேடிப் பார்த்தபோது அவர் அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி உள்ள வாகனங்களை நிறுத்தும் பகுதியிலுள்ள கூரையின் மேல் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து எர்ணாகுளம் மத்திய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரித்த போது குமாரி 6வது மாடியில் இருந்து சேலையை கயிறு போல கட்டி கீழே இறங்க முயன்றது தெரிய வந்தது. ஆனால் கைதவறி அவர் கீழே விழுந்தார்.

குமாரி விழுந்து கிடந்த இடத்தில் போலீசாரால் ஏற முடியாததால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று குமாரியை மீட்டனர். பின்னர் அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எதற்காக அவ்வாறு தப்பிக்க முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தற்போது குமாரி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இம்தியாஸ் கானிடமும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>