பெங்களூருவில் ரஜினி.. புதிய கட்சி குறித்து தீவிர ஆலோசனை..

ரஜினிகாந்த் நேற்று(டிச.6) பெங்களூருக்கு சென்றார். அங்கு அவர் தனது புதிய கட்சி குறித்து முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு முதல் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 25 வருடமாக அவரும் வருவதாகப் போக்கு காட்டி வந்தார். இந்நிலையில், கடந்த நவ.30ம் தேதி தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ரஜினிகாந்த் அன்று அளித்த பேட்டியில், மன்ற நிர்வாகிகள், நான் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

அதன்பின்பு, ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிச.3ம் தேதி ஒரு பதிவு போட்டார். ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப் போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும் என்று கூறியிருந்தார்.

அதற்குப் பிறகு அளித்த பேட்டியில், அண்ணாத்தே படத்தை முடித்துக் கொடுத்து விட்டு கட்சிக்கு வருவேன். கட்சிக்கு மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனை நியமித்துள்ளேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமித்துள்ளேன் என்று அறிவித்திருந்தார். அர்ஜுன மூர்த்தி, பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக இருந்தவர். அவரை ஆடிட்டர் குருமூர்த்தி தான் ரஜினி கட்சியில் சேர்த்து விட்டிருக்கிறார் என்றும், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார் என்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில், ரஜினி நேற்று(டிச.6) பெங்களூருவுக்கு சென்றார். அங்குத் தனது மூத்த சகோதரர் சத்தியநாராயணாவிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். பெங்களூருவில் சில நாட்கள் தங்கவுள்ள ரஜினி அங்கு அமித்ஷாவின் தூதர்கள் சிலரைச் சந்திக்கவுள்ளதாகவும், தனது புதிய கட்சிக்கு யாரையெல்லாம் இழுப்பது, எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து அவர்களிடம் விவாதிக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் இருந்து ஐதராபாத்துக்குச் செல்லும் ரஜினிகாந்த், டிச.15ம் தேதி முதல் அங்கு நடைபெறவுள்ள அண்ணாத்தே படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், மீதி 40 சதவீதப் படப்பிடிப்பும் இம்மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது.

More News >>