வகுப்பறையில் வைத்து கல்யாணம் மகளை வீட்டுக்குள் அனுமதிக்க பெற்றோர் மறுப்பு

ஆந்திராவில் வகுப்பறையில் வைத்து பிளஸ் டூ படிக்கும் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியைப் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவரை போலீசார் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இருவருமே வயதுக்கு வராதவர்கள் என்பதால் திருமணம் செல்லாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன் ஆந்திராவில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.

அதில், பள்ளி வகுப்பறையில் வைத்து சீருடையில் உள்ள ஒரு மாணவன், மாணவிக்குத் தாலி கட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தாலி கட்டி முடித்ததும், தன்னுடைய நெற்றியில் குங்குமம் வைக்குமாறு மாணவனிடம் அந்த மாணவி கூறுகிறார். உடனே அந்த மாணவன், மாணவிக்குக் குங்குமம் வைத்து விடுகிறார். இந்த தாலி கட்டும் நிகழ்ச்சியை இன்னொரு சக மாணவர் செல்போனில் படமெடுத்துள்ளார். சீக்கிரம் தாலி கட்டுங்கள், யாராவது வந்து விடப்போகிறார்கள் என்று அந்த மாணவன் கூறுவதும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோ சமூக இணையதளங்களில் பரவத் தொடங்கியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஒரு பள்ளியில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி நிர்வாகம் திருமணம் செய்த மாணவன், மாணவி உள்பட 3 மாணவர்களை டிஸ்மிஸ் செய்தது.இந்த சம்பவம் தெரியவந்ததைத் தொடர்ந்து அந்த மாணவியைப் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து போலீசார் அந்த மாணவியை ராஜமுந்திரியில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநில மகளிர் ஆணையம் அந்த மாணவிக்கு கவுன்சிலிங் அளித்து வருகிறது. இதற்கிடையே இருவரும் வயதுக்கு வராதவர்கள் என்பதால் இந்த திருமணம் செல்லாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவனின் பெற்றோருடனும் மகளிர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆந்திர மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

More News >>