ஆந்திராவில் வேகமாக பரவும் மர்ம நோய்க்கு ஒருவர் பலி.. சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில நாட்களாக ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று விஜயவாடா மருத்துவமனையில் இந்நோய் பாதித்த ஒருவர் மரணமடைந்தார். இதையடுத்து சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வரும் ஒரு மர்ம நோய் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென மயக்கம் போட்டு விழுவது, வாந்தி, குளிர் காய்ச்சல் போல உடலில் உதறல் ஏற்படுவது ஆகியவை தான் இந்நோயின் அறிகுறிகளாகும்.
கடந்த இரு தினங்களில் மட்டும் 270 க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதித்து விஜயவாடா உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் இந்நோய் அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். நோய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் யாருக்கும் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனாலும் நோய்க்கு என்ன காரணம் என்று இதுவரை சுகாதாரத் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் விஜயவாடா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட 45 வயதான ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இது பொதுமக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விஜயவாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர், சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நோய் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த 5 பேர் அடங்கிய ஒரு டாக்டர்கள் குழு விரைவில் ஆந்திராவுக்கு வர உள்ளதாக பாஜக எம்பி நரசிம்மராவ், ஆந்திர தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளார்.